அந்த வகையில் அரசாங்கத்திற்கும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் காலமெல்லாம் பல்லக்கு தூக்கியே பழக்கப்பட்டுவிட்ட மின்னல் வானொலி, மலேசிய தேசிய அரசியலில் ஏறக்குறைய இருபது ஆண்டுகளாக துடிப்புடன் செயல்பட்டு வரும் அரசியல்வாதியும் சமூகவாதியுமான மு.குலசேகரனை இத்தனைக் காலமும் கடுகளவும் கண்டு கொள்ளாத வானொலி, அவர் அமைச்சர் ஆனதும் கொஞ்சம் கூட மனங்கூசாமல் வரவேற்று உச்சி முகர்ந்து பாராட்டி மகிழ்ந்துள்ளது.
குலசேகரன் தான் சார்ந்துள்ள கட்சியின் அடிப்படையில் எதிரணியில் நின்று காலமெல்லாம் செயல்பட்டு வந்தாலும் இந்திய சமுதாய நோக்கிலும் பொதுவாக மலேசியக் கூட்டு சமுதாயத்தின்பால் கொண்டுள்ள அக்கறையில் எத்தனையோ கருத்துகளை நடுநிலையுடன் சொல்லி இருக்கிறார்.
(கலைக்கப்பட்ட)தென்னிந்திய தோட்டத் தொழிலாளர் நலநிதி, தமிழ்ப் பள்ளிகளின் நிர்வாகப் பணியாளர்கள், மாநில மற்றும் தேசிய இந்து சமய அறவாரியம், வெளிநாட்டுத் தொழிலாளர்கள், மதமாற்றச் சிக்கல், ஆரம்பப் பள்ளி மாணவர்களின் புத்தகப் பை சுமை, இருமொழி கல்வித் திட்டம், இதற்கு முன் கணித-அறிவியல் பாடங்களை ஆங்கில மொழியில் பயிற்றுவித்தல், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் முதலாளிகளாக செயல்படுவது, சங்கப் பதிவகம், தேர்தல் ஆணையம் போன்ற அரச அமைப்புகள் பக்கசார்புடன் நடந்து கொள்வது, ஆளுந்தரப்பினரின் கருத்தை மட்டும் ஒலி பரப்புவது, எதிர்க்கட்சியினரின் கருத்தை இருட்டடிப்பு செய்வது, இந்திய இளம் ஆண்களும் பெண்களும் உரிய காலத்தில் மணம் முடிப்பது, உயர்க்கல்வி நிலையங்களில் இந்திய மாணவர்களுக்கான வாய்ப்பு, அதைப்போல இந்தியர்களுக்கான அரசாங்க வேலை வாய்ப்பு உள்ளிட்ட ஏராளமான பிரச்சினைகளைப் பற்றி நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பேசி இருக்கிறார்.
அப்பொழுதெல்லாம் அரசியல் வட்டத்தில் குலா என்று செல்லமாக அழைக்கப்படும் குலசேகரனைப் பற்றி தூசி அளவுக்குக்கூட பொருட்படுத்தாத மின்னல் வானொலி, இப்பொழுது அவர் முழு அமைச்சரானதும் அவரை வருந்தி வருந்தி அழைத்து மணிக்கணக்கில் அவருடன் குலாவி மகிழ்ந்துள்ளது.
குலசேகரனும் கொஞ்சம் நிதானித்திருக்கலாம். இத்தனைக் காலமும் கைம்மாறு கருதாத கடப்பாட்டுடன் அவர் ஆற்றிய பணியால்தான் சமூகத்தில் அவர் மதிக்கப்படுகிறார். அரசாங்க வானொலியான மின்னல் அவரை அடியோடு புறக்கணித்தாலும் அவர் அரசியலில் மிளிர்ந்து கொண்டுதான் இருந்தார்.
இப்பொழுது அமைச்சர் ஆனதும், இதே மின்னல் வானொலியினர் சளைக்காமல் அழைத்தபோது, கொஞ்சம் காலம் கடத்தி இருக்கலாம். பணிச் சுமையும் நேரமின்மையும் சூழ்ந்துள்ளதால் கொஞ்ச காலம் போகட்டும் என்று தள்ளிப் போட்டிருக்கலாம்.
இப்படி யெல்லாம் இன்றி அவர்கள் அழைத்த மாத்திரத்தில் புன்னகை மாறாத முகத்துடன் மின்னல் வானொலி நிலையத்திற்கு ஓடோடிச் சென்று “அப்பா ம.இ.கா. காரர்; படிப்பறிவில்லாத அம்மா விசாலாட்சி பால் கணக்கில் கெட்டிக்காரர்; வீட்டில் இருந்தால் சளைக்காமல் வேலை கொடுத்து பின்னி எடுத்துவிடுவார்கள்; அதனால் பள்ளிக்கு தவறாமல் ஓட்டம் பிடித்து விடுவேன்” என்றெல்லாம் மாய்ந்து மாய்ந்து தன்னைப் பற்றி குலா சொல்லிக் கொண்டது அத்தனைப் பொருத்தமாகப் படவில்லை.
அதேவேளை, இத்தனைக் காலமும் தேசிய முன்னணியினரையும் மஇகா-வினரையும் மாய்ந்து மாய்ந்து புகழ்மாலை சூட்டி வந்த மின்னல் வானொலி, தற்பொழுது அவர்களை மருத்துக்குகூட கண்டுகொள்வதில்லை.
அடிபட்டு அதள பாதாளத்தில் கிடக்கும் மஇகா, காலமெல்லாம் இப்படியே இருந்துவிடப் போவதில்லை; நாளைய காலத்தில் அது எழுச்சி பெறலாம்; புது வடிவில் புத்தெழுச்சி பெற்று புதுப்பாங்குடன் செயல் படலாம்; மீண்டும் மக்களின் மதிப்பைப் பெறலாம்.
எனவே, கடந்த அறுபது ஆண்டுகளாக அதிகார நாற்காலியில் தொற்றிக் கொண்டிருந்த மஇகா-வின் தற்கால நடவடிக்கை; எதிர்காலத் திட்டம்; இந்திய சமுதாயத்தின் தாய்க்கட்சி என்னும் பிம்பம் சிதைந்துள்ளதா?; இதை செம்மப்படுத்த முடியுமா? கடந்த ஐந்து மாமாங்க காலமாக அரசாங்கத்தில் இந்தியர்களைப் பிரதிநிதித்தக் கட்சியின் தற்போதைய பரிமாணம் என்ன என்பது குறித்தெல்லாம் அதன் தேசியத் தலைவர், இளைஞர் தலைவர், மகளிர் தலைவி ஆகியோரிடம் கருத்து கேட்டு நாட்டு மக்களுக்கு, குறிப்பாக இந்திய சமுதாயத்திற்கு சொல்லலாம்.
அதையெல்லாம் விடுத்து, அவர்களை அடியோடு புறக்கணித்து ஆட்சியிலும் அதிகாரத்திலும் உள்ளவர்களுக்கு மட்டும் பல்லக்கு தூக்குவதும் பரிவட்டம் கட்டி மரியாதைக் கொடுப்பதையுமே வழக்கமாக கொண்டிருக்கும் மின்னல் வானொலிக்கு முதுகெலும்பு உள்ள நிருவாகி தலைமை ஏற்க வேண்டும்.
தன்னல நோக்கில் தேயிலைத் தூள், காப்பித் தூள், மசாலைத் தூள், மெத்தை, கட்டில், கல் வியாபாரிகளுக்கு ‘லாலி’ பாடியும் ஒத்தூதியும் வெண்சாமரம் வீசி வாலாட்டும் இழி போக்கை இந்த வானொலி நிலையப் பணியாளர்கள் விட்டொழிக்க வேண்டும்.
அதேவேளை, ஆட்சியில் இல்லை என்ற காரணத்திற்காக அம்னோ, மசீச, மஇகா, கெராக்கான், பாஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் வெளிப்படுத்தும் நியாயமான கருத்தைகளைப் புறக்கணிக்காமல் அவற்றையும் அரசாங்க தகவல் சாதனங்கள் பிரதிபலிக்க வேண்டும். அந்தக் காலப் புலவர்களைப் போல அவர்கள் அரசாங்கத்தை இடித்துரைக்கும் நியாயமான விமர்சனத்தையும் அரசாங்க தகவல் சாதனங்கள் ஒளி-ஒலி பரப்ப வேண்டும். இதற்கான ஊக்கத்தையும் துணிவையும் இன்றைய புது அமைச்சர் கோபிந்த் சிங் டியோ சம்பந்தப்பட்டவர்களுக்கு அளிக்க வேண்டும்.
காலமெல்லாம் அடிமைத் தனமாக செயல்பட்டவர்களுக்கு விடுதலைத் தன்மை வெளிப்பட சற்று காலம் பிடிக்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, அரசாங்க தகவல் சாதன முனையங்களை, தேசிய முன்னணியின் பிரச்சார மையங்களாகப் பயன்படுத்தி வந்த அந்த முன்னணியின் தலைமைப் பீடத்தினர்தான் இத்தனைச் சிறுமைக்கும் அடிப்படைக் காரணம் என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
அத்தகைய கீழானப் போக்கு இந்த அரசால் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
source ; https://www.semparuthi.com/163444